பொங்கல் காப்பு கட்டுதல் (Kappu Kattu) மூலிகைக்கு மரியாதை
மனிதனுக்கு ஏற்படும் பிணிகளை நீக்கும் அருமருந்துகளான மூலிகைகள் இயற்கையின் ஏற்பாட்டில் தேவை உள்ள பகுதிகளில் தேவையான மூலிகைகள் என்கிற வகையில் தானாகவே விளைந்து கொண்டிருக்கின்றன. இவற்றையெல்லாம் சரியாக கண்டுபிடித்து உட்கொண்டு தங்களுக்கு ஏற்படும் நோய்களை தீர்த்துக் கொள்ளும் வித்தையை இவ்வுலகில் உள்ள ஒவ்வொரு உயிரினத்துக்கும், இயற்கையே வாரி வழங்கியுள்ளது.
பொங்கல் பண்டிகை :-
பொங்கல் பண்டிகை என்பது நம் மண்ணிற்கும், இயற்கைக்கும் நன்றி தெரிவிக்கும் நாளாக இருந்தாலும், அது நம் உடலுக்கும் மனதிற்கும் மறைமுகமாக ஆரோக்கியம் தரும் பண்டிகை நாளாக உள்ளது. பழங்காலத்தில் இந்த பொங்கல் கொண்டாடும் நாட்கள் மழைக்காலம் முடிந்து, குளிர்காலத்தின் ஒரு பகுதியில் நடைபெறுவதால், உடலின் அதிக அளவு உஷ்ணசக்திகள் மாறி மாறி வெளியேறி, மக்களிடையே காலரா, பெரியம்மை போன்ற தொற்று நோய்கள் ஏற்படும்.
மேலும் மழைக்காலம் முடிந்தவுடன் பல நச்சுப் பூச்சிகள் வீடுகளை நோக்கிப் படையெடுக்க ஆரம்பித்து விடும் என்பது நாம் அனைவரும் அறிந்த விஷயம் ஆகும். எனவே இதனைத் தவிர்க்கவே பொங்கலுக்கு முன்பு வீட்டில் உள்ள அனைத்துப் பொருட்களையும் சுத்தம் செய்து, சுண்ணாம் கொண்டு சுவர்களை வெள்ளையடித்து, வீட்டின் வாசல் முன்பு மாட்டுச்சாணம் கொண்டு மொழுகுவர்கள்.
ஏனென்றால், சுண்ணாம்பு மற்றும் மாட்டுச்சாணத்தின் காரத்தன்மையால், பூச்சிகள் வராது என்பது அறிவியல் ரீதியான உண்மை. மேலும் வெள்ளை அடிப்பதினால் சுவர்களில் வெயிலினால் ஏற்படும் தாக்கம் குறைந்து, வீட்டைத் தாக்காமல் பாதுகாக்கும். இதனால் வெயில் காரணமாக தோன்றும் அம்மை, வயிற்றுப்போக்கு மற்றும் தோல் சம்மந்தப்பட்ட நோய்கள் நம்மை நெருங்காது.
இது பொங்கல் பண்டிகை காலம் என்பதால் தமிழர்கள் மகிழ்ச்சியுடன் அறுவடை திருநாளை கொண்டாடும் அற்புதமான தருணம். பண்டிகை என்பது கொண்டாட்டமாக மட்டுமே இருந்து விடக்கூடாது என நினைத்த, நம் முன்னோர்கள் சில சாங்கிய, சம்பிரதாயங்களை பழக்கப்படுத்தினார்கள். அதன்படி ஒவ்வொரு பண்டிகையின் பின்னாலும் மனித நல்வாழ்வுக்கான ஒரு செய்தி ஒளிந்தே இருக்கிறது என்பது மறுக்க, மறக்க முடியாத உண்மை.
இந்த பொங்கல் திருநாள் 4 நாட்கள் கொண்டாடப்படுகிறது.
- முதல் நாள் – போகி பண்டிகை
- இரண்டாம் நாள் – தைப் பொங்கல்
- மூன்றாம் நாள் – மாட்டுப் பொங்கல்
- நான்காம் நாள் – காணும் பொங்கல்
போகி பண்டிகை
போகி (Bhogi) பண்டிகையின் தொடக்கமே வீட்டில் காப்புக் கட்டும் நிகழ்ச்சியாகும். தைத் திருநாளை வரவழைக்கும் விதமாக மார்கழி மாதத்தின் கடைசி நாள் அன்று “காப்பு கட்டுதல்” என்ற பெயரில் மா இலை, வேம்பு இலை, பூளைப்பூ, ஆவாரை செடி, பிரண்டை ஆகியவற்றை சேர்த்து வீடுகளின் முற்றங்கள் மற்றும் பின் வாசலில் கட்டி வைப்பார்கள். இந்த மூலிகைகள் அனைத்தும் சிறந்த நோய்த்தடுப்பானாக இருந்து நம்மையும் நமது கால்நடைகளையும் பாதுகாக்கும்.
மேலும் தங்களுடைய விவசாய நிலங்களின் எல்லை பகுதிகளிலும் காப்பு கட்டுவார்கள்.
காப்புக் காட்டுதலின் முக்கிய நோக்கம் பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியம் கிடைக்கும் எனவும் சுத்தம் செய்த வீட்டிற்குள் கெட்டது எதுவும் வராமல் இருப்பதற்காகவும் கொண்டாடப்படுகிறது.
காப்புக் கட்டு என்பது மூலிகைகள் அடங்கிய முதலுதவிப்பெட்டி. மருத்துவ வசதிகள் இல்லாத அந்தக் காலத்தில், விஷக்கடி, ஒவ்வாமை, வயிற்றுப்போக்கு போன்ற சிறு சிறு பிரச்னைகளுக்குத் தேவையான மூலிகைகள் வீட்டில் தயாராக இருக்க வேண்டும் என்பதற்கான ஏற்பாடுதான் காப்பு கட்டு என்ற திருவிழாவை கொண்டாடினார்கள் நம் முன்னோர்கள்.





அதேப்போலவே மாட்டுப் பொங்கல் அன்று மாடுகளின் கழுத்தில் பிரண்டை, வேம்பு இலை, மா இலை ஆகியவற்றை கட்டி ஓடவிடுவார்கள். இவை அனைத்தும் தற்போது வெறும் சடங்குகளாக மட்டுமே கொண்டாடப்படுகிறது. ஆனால் இந்த சடங்குகளின் பின்னால் அறிவியல் ரீதியான, அறிவுப்பூர்வமான, ஆரோக்கிய அணுகுமுறைகள் இருக்கிறது.
உதாரணமாக பூரான், பூச்சி போன்ற விஷக்கடிகளில் இருந்து முதல் உதவி பெற்றுக் கொள்ளவும், உழுது வண்டி இழுத்து கழுத்தில் வலியோடு இருக்கும் மாடுகளுக்கு வலியை குறைக்கவும் மாடுகளுக்கு பிரண்டை மாலை அணிவித்தார்கள் ஆதி தமிழர்கள்.
போகி (போக்கி) பண்டிகை என்பது “பழையன கழிந்து புதியன புகுதல்” என்று சொல்லப்படுகிறது. அதாவது போகி அன்று வீட்டில் உபயோகமில்லாத பழைய பொருள்கள் மற்றும் தேவையற்ற பொருட்களை தீயிட்டு எரிப்பார்கள். இதையே போகி என குறிப்பிடுகின்றனர். பழைய பொருள்களை மட்டுமில்லாமல், எதிர்மறையான பழைய சிந்தனைகளையும் மாற்றி புதிய சிந்தனைகளையும் பிறக்கும் வாய்ப்பாகவே போகி கொண்டாடப்படுகிறது.
தமிழ் வருடத்தின் கடந்த ஆண்டுக்கு நன்றி சொல்லும் நாள் போகிப் பண்டிகையாகும்.
காப்பு கட்டுதல் – நல்ல நேரம்
வீடுகளில் காப்பு கட்டுதலுக்கு ஏற்றது மாலை நேரம் ஆகும்.
சிறுபீளை (கூரைப்பூ/பூளைப்பூ)
தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் மாணவாரியாக விளைந்து கிடக்கும் சிறுபீளை செடி, சிறுநீர் கல்லை கரைக்கும் அபாரமான சக்தி படைத்த அருமருந்தாக இருக்கிறது. இது கடினமான பாறையை உடைக்கும் சிறு உளியைப் போன்றது.
இந்த சிறப்பான மூலிகைசெடி ஆண்டின் அனைத்து நாட்களில் முளைத்தாலும் மார்கழி தை ஆகிய பணி மாதங்களில் நன்கு பசுமையாக வளரும். நகரம், கிராமம் மற்றும் தரிசான நிலங்கள், வயல்கள் என எங்கெங்கும் இந்த மூலிகைசெடி நிறைந்திருக்கும். இந்த செடிக்கு சிறுகண் பீளை, கண்பீளை, கற்பேதி என பல பெயர்கள் இருக்கின்றன.
நீர்க்கடுப்பு, சிறுநீர்கல் போன்ற பிரச்னைகளுக்காகவே இதனையும் காப்புக் கட்டு என்ற பெயரில் வீட்டில் வைத்திருந்தனர் நம் முன்னோர்கள்.
ஆவாரை
“ஆவாரைப் பூத்திருக்க சாவாரைக் கண்டதுண்டோ” என்கிறது சித்தர் பாடல் ஒன்று உள்ளது.
உடல் சூட்டைத் தடுக்கும் அற்புதமான மூலிகை தான் ஆவாரை செடி. இந்த ஆவாரை செடி தரிசு நிலம் எங்கும் தானாக விளைந்து கிடக்கும் அற்புத மூலிகை. இன்றைக்கு உலகில் அதிகரித்து வரும் கொடிய நோய்களான சர்க்கரை மற்றும் புற்றுநோய்க்குத் தீர்வாக ஆவாரை விளங்குகிறது. கிராமங்களில் ஆடு, மாடு மேய்ப்பவர்கள் வெயிலினால் ஏற்படும் சூட்டைத் தணித்துக் கொள்ள தலையில் ஆவாரை இலையை வைத்துக் கொள்வார்கள்.
இன்றைக்குப் பிரபலமாக இருக்கும் கிரீன் டீ யை விட அற்புதமானது ஆவாரை நீர். சிறிதளவு ஆவாரம் பூவை தண்ணீரில் போட்டுக் கொதிக்க வைத்து பின்பு வடிகட்டி தேன் அல்லது பனங் கருப்பட்டி சேர்த்து அருந்தினால், உடல் புத்துணர்வு பெறும். மேலும் சரும நோய்கள் குணமாகும்.
ஆவாரை இலையை கல்லில் வைத்து தட்டி தலையில் தேய்த்துக் குளித்தால் உடல் சூடு கண் வழியே வெளியேறுவதை நம்மால் உணர முடியும். உடல் துர்நாற்றத்தைத் போக்க, உடலை மினுமினுப்பாக்க மாற, தலைமுடி வளர என ஆவாரையின் பயன்கள் மிக அதிகம்.
ஆவாரை இலை, பூ, காய், பட்டை, வேர் ஆகிய ஐந்தையும் சம அளவு எடுத்துப் பொடி செய்து வைத்துக்கொண்டு, இதைத் தினமும் ஒரு தேக்கரண்டி வாயில் போட்டு வெந்நீர் பருகி வந்தால் உடல் சோர்வு, நாக்கு வறட்சி, நீரிழிவு, தூக்கமின்மை போன்ற நோய்கள் குணமாகும்.
ஆவாரம் பூவினை நிழலில் உலர்த்தி, பொடி செய்து, கஷாயம் காய்ச்சிக் குடித்து வந்தால் நீரிழிவு கட்டுக்குள் கொண்டுவரும். இத்தனை அற்புதங்கள் இருப்பதால்தான் ஆவாரையைக் காப்புக் கட்டுதலில் வைத்தார்கள்.
வேப்பிலை
வேப்பிலை சிறந்த கிருமிநாசினி. காற்றில் பரவும் கிருமிகளைத் தடுக்கும் ஆற்றல் கொண்டது. அதனால் திருவிழாக்கள் போன்ற மக்கள் கூடும் இடங்களில் வேப்பிலை தோரணம் கட்டுவதை வழக்கமாக்கி வைத்திருக்கிறார்கள். அந்த அடிப்படையில்தான் காப்புக் கட்டு சடங்கு மூலமாக வீட்டிலும் வேப்பிலையை வைத்திருக்கச் செய்தார்கள் முன்னோர்கள். இப்போது புரிகிறதா? காப்புக் கட்டு வெறும் சடங்கு மட்டும் அல்ல. அதற்குப் பின்னால் இருப்பது ஆதித் தமிழனின் மருத்துவ அறிவு. இந்த அறிவைத் தலைமுறைகள் தாண்டிக் கொண்டு செல்ல வேண்டியது நம் அனைவரின் கடமை. இதற்காக அதிகம் மெனக்கெடத் தேவையில்லை. இன்று காப்புக் கட்டும் போது, அதை எதற்காகக் கட்டுகிறோம் என்பதையும் குழந்தைகளுக்கு எடுத்துச் சொல்லுங்கள் போதும்.
மா இலை
காற்று மண்டலத்தில் ஆக்ஸிஜன் செறிவை அதிகப்படுத்தி காற்றை சுத்தப்படுத்தும். கூரைப்பூ (கண்ணுப்பிள்ளைப்பூ) பூச்சிகள் பிரவேசத்தை தடுக்கும். சீரான சிறுநீர்போக்கு ஏற்படுத்தும். விஷ முறிவுக்கு உதவும். வேம்பு இலை நோய் எதிர்ப்பு தன்மை கொண்டது. கொசுக்களை தடுக்கும். ஆவாரம்பூ சர்க்கரை நோய், தோல் வியாதிகளை தடுக்கும். தும்பை செடி மார்கழி பனி முடிந்து, கோடை துவங்குவதால் ஏற்படும் காலநிலை பிணிகளை குணமாக்கும். பூளைப்பூ வெற்றியின் சின்னமாக கருதப்படுகிறது.
ஆக பொங்கல் பண்டிகை கொண்டாடும் போது சம்பிரதாயமாக கொண்டாடாமல் நாம் பயன்படுத்தும் மூலிகைகளின் பயன்களை அறிந்து அதன் படி இனி பண்டிகையை கொண்டாடுவோம்.