திருக்கார்த்திகை தீபத் திருவிழாவின் சிறப்பு
திருக்கார்த்திகை தீப திருவிழா தமிழர்களின் சிறப்பான வழிபாடுகளில் ஒன்று. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக கொண்டாடப்படுகிறது. கார்த்திகை தீப வழிபாட்டிற்கு அகல் விளக்குகளே அதிகமாக பயன்படுத்தப்படுகின்றன. சங்க இலக்கியத்தில் திருக்கார்த்திகை தீபம் பெருவிழா என்றும் குறிப்பிடப்படுகிறது.
வீட்டில் விளக்கேற்றுவது வம்சத்தை செல்வச்செழிப்போடு வாழ வைக்கும்.
நமது கலாசாரத்தில் நாம் எதை செய்தலும் அது நம் நல்வாழ்வுக்கு வழிவகுக்கும் வகையில் அறிவியல் ரீதியாகவே அனைத்தையும் செய்தார்கள். இவ்வகையில் கார்த்திகை விளக்கு ஏற்றுவது முக்கியத்துவம் பெறுகிறது. ஏனெனில் நாம் பார்த்து உணர்வதற்கு ஒளி மிக அவசியம். நம்மைச் சுற்றி இருக்கும் இந்த உலகத்தை நாம் புரிந்துகொள்வதில் நம்முடைய பார்வை பெரும் பங்கு வகிக்கிறது. வெளிச்சம் இல்லாவிட்டால் நம்மை சுற்றி இருக்கும் எந்த பொருளையும் நம்மால் உணர முடியாது. எனவே நமக்கு ஒளி மிகமுக்கியம்.
பொதுவாக கார்த்திகை தீபம் அன்று வீட்டை முழுமையாக சுத்தம் செய்து, மண் விளக்குகளால் கார்த்திகை தீபம் ஏற்றி அலங்கரிப்பது வழக்கம். இதில் குறிப்பாக 27 விளக்குகள் ஏற்றுவது ஐதீகம். இப்படிச் செய்தால் சகல சவுபாக்கியங்களும் வாழ்க்கையில் நமக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. இந்த 27 விளக்குகள் 27 நட்சத்திரங்களைக் குறிப்பதாகும்.
27 விளக்குகள் ஏற்ற முடியாதவர்கள் குறைந்தது 9 கார்த்திகை தீபங்களை ஏற்றலாம். முக்கியமாக ஒற்றைப்படை எண்ணிக்கையில் தீபம் ஏற்றுவது மிகவும் சிறப்பு.
முடிந்த வரையில் அதிக எண்ணிக்கையில் விளக்கு ஏற்றி வழிபடுவது சிறப்பைத் தரும். இருந்தாலும் எத்தனை விளக்கு ஏற்றுகிறோம் என்பதை விட விளக்கின் முகங்கள் எத்தனை உள்ளது என்பதைப் பொறுத்தே பலன்கள் மாறுபடும்.
- 1 முகம்: சாந்தமான மன நிலையை கொடுக்கும்.
- 2 முகம்: குடும்பத்தில் துயரங்கள் நீங்கும், செல்வம் தரும், சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் கூடும்.
- 3 முகம்: செய்யும் செயல்களில் தடைகள் எல்லாம் நீங்கி வெற்றி கிடைக்கும், மனதில் நம்பிக்கை அதிகரிக்கும்.
- 4 முகம்: சொத்து சுகம் சேரும், ஆரோக்கியத்தில் மேன்மை அடையும்.
- ஐந்து முகம்: குறை இல்லாத நல்வாழ்க்கை அமையும்.

கார்த்திகை மாதம் முழுதும் தினமும் காலை மற்றும் மாலையில் வீடுகளிலும் ஆலயங்களிலும் விளக்கு ஏற்றி வழிபடுவது அக்கினியின் வாயிலாக யாகத்திற்கு நிகரான பலன் தரக்கூடியது.
கார்த்திகை தீபத்தின் முதல்நாள் ஏற்றப்படும் தீபம் பரணி தீபமாகும். இது முருகனுக்குரிய வழிபாடு. மறுநாள் திருக்கார்த்திகை தீபம் சிவனுக்காக ஏற்றப்படுகிறது. கார்த்திகை மாத வளர்பிறை கிருத்திகை நட்சத்திரத்தில் இந்த விழா கொண்டாடப்படுகிறது.
அன்று விரதம் இருந்து மாவிளக்கு ஏற்றி வழிபடுவதே முறையான வழிபாடாகும்.
மாலை மாவிளக்கு ஏற்றி அந்த விளக்கிற்கு பூஜை செய்து அதன்பிறகே உணவு உண்ண வேண்டும்.
கார்த்திகை அன்று பகலில் உண்ணாவிரதம் இருக்க வேண்டும்.
விளக்கு ஏற்றும்போது நாம் கவனிக்க வேண்டியது:
நம்முடைய கலாச்சாரத்தில் விளக்கு என்பது மிக முக்கியமானதாக வணங்கப்பட்டு வருகிறது. இந்த விளக்கை எப்படி ஏற்ற வேண்டும், தீபம் எப்படி இருக்க வேண்டும் என்பது மிகமுக்கியமாக சொல்லப்பட்டு இருக்கிறது.
விளக்கு ஏற்றும் போது அதற்கு நெய், விளக்கெண்ணெய் அல்லது நல்லெண்ணெய் மட்டும் தான் பயன்படுத்த வேண்டும். இவற்றை உபயோகிக்கும் போது மட்டும் தான் விளக்கின் தீபத்தில் ஓரு ஒளிவட்டம் வெளிப்படுகிறது. இந்த ஒளிவட்டத்தின் மூலமாக நாம் வசிக்கும் இடம் சுத்தமாகும்.
கடலை எண்ணெய்யில் விளக்கு ஏற்றக்கூடாது. இது ஒரு மகா பாவம் என்று சாஸ்திரங்களில் கூறப்படுகிறது.
இவை தவிர, தெற்கு திசை தவிர்த்து மற்ற எந்த திசையிலும் தீப முகம் இருக்கலாம். தீபத்தை தரையில் வைக்கக் கூடாது. காமாட்சி அம்மன் விளக்கு என்றால், ஒரு பித்தளை தட்டு அல்லது தாமிரம் அல்லது பஞ்சலோகத் தட்டில் அரிசி, துவரை, உளுந்து, மஞ்சள் கிழங்கு வைத்து, அதன் மேல் விளக்கை வைத்து தீபமேற்ற வேண்டும். குத்து விளக்கு என்றால், ஒரு சிறிய வாழை இலையில் அரிசி வைத்து, அதன்மேல் விளக்கை வைத்து தீபமேற்ற வேண்டும்.
இவை தவிர தெற்கு திசையை தவிர்த்து மற்ற எந்த திசையிலும் தீப முகம் இருக்கலாம்.
எனவே நாம் அதிகமாக புழங்கும் இடம் வீடு, தொழில் நடக்கும் இடம் எதுவாக இருந்தாலும் சரி அந்த இடத்தில் நாளெல்லாம் விளக்கு ஏற்றி ஒளிரவிடும் பழக்கம் இருக்கிறது. மேலும் நீங்கள் படுக்கும் இடம், குழந்தைகள் படிக்கும் இடம் மற்றும் பொதுவாக அதிக நேரம் இருக்கும் இடங்களில் விளக்கு ஏற்றி வைப்பது நிச்சயம் மிகவும் நல்லது. இது நம் மனநிலைக்கும் ஆரோக்கியத்திற்கும் நன்மை பயக்கும்.
திருவண்ணாமலை மலையில் தீபம் ஏற்றப்படும் நேரம்:
கார்த்திகை தீப திருநாளை ஒட்டி கார்த்திகை தீப பிரம்மோற்சவ திருவிழா திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அண்ணாமலையார் கோவிலில் நடைபெறுகிறது. இதில் 10 நாட்கள் உற்சவர்கள் ஊர்வலங்களும், 3 நாள் தெப்ப திருவிழாவும் அதனை அடுத்து சண்டிகேஸ்வரர் உற்சவம் நடைபெறுகிறது.
சிவன் காத்திகை மாதம் கிருத்திகை நட்சத்திரத்தில் திருமால், பிரம்மன் இருவருக்கும் அக்னி வடிவமாக காட்சி அளித்தார். இந்த நாளிலேயே தீபத்திருநாள் கொண்டாடப்படுகிறது. அன்று அதிகாலையில் அண்ணாமலையார் சன்னதியில் ஒரு தீபம் ஏற்றி அதன் மூலம் மேலும் ஐந்து தீபங்கள் ஏற்றி பூசைசெய்வர்கள். பின்பு அந்த தீபங்களை ஒன்றாக்கி அண்ணாமலையார் அருகில் வைத்து விடுவர். இதனை ஏகன் அநேகனாகி அநேகன் ஏகனாகுதல் தத்துவம் என்கிறார்கள். பரம்பொருளான சிவனே பல வடிவங்களாக அருளுகிறார் என்பதே இந்த திருவிழா ஆகும்.

சுமார் 25 ஏக்கர் பரப்பளவில் 9 கோபுரங்களையும் 6 பிரகாரங்களையும் 142 சன்னதிகளையும் 306 மண்டபங்களையும் உள்ளடக்கியது இந்த அண்ணாமலையார் திருக்கோவில் ஆகும்.
கார்த்திகைதீபத் திருநாளன்று அதி காலை 5 மணியளவில் மலை அடிவாரத்தில் ஏற்றப்படுவதைப் பரணிதீபம் என்றும் மாலையில் மலை உச்சியில் ஏற்றப்படுவதை மகாதீபம் என்றும் குறிப்பிடுகிறார்கள். இந்த தீபம் சிவன் அக்னி பிழம்பாகவும், நெருப்பு மலையாக நின்றார் என்ற ஐதீகப்படி மலையில் தீபம் ஏற்றப்படுகிறது. இத்தீபம் ஏற்றும் மலை சுமார் 2,668 அடி உயரம் கொண்டது.

மகாதீபம் ஏற்ற 5 அடி உயரமும் 250 கிலோ எடையும் கொண்ட செம்பு, இரும்பு கொண்டு தயாரிக்கப்பட்ட கொப்பரையில் தீபம் ஏற்றுவர். இத்தீபம் ஏற்ற சுமார் 3,௦௦௦ கிலோவுக்கும் மேற்பட்ட நெய்யும் 1,000 மீட்டர் காடா துணியும் பயன்படுத்தி ஏற்றப்படுகிறது.
இந்த மகாதீபம் தொடர்ந்து 11 நாட்களுக்கு தினமும் எரிந்து கொண்டிருக்கும். தீபம் அணையாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது இவர்கள் கடமை. தினமும் மாலை கொப்பரையை சுத்தம் செய்து மீண்டும் நெய்யால் நனைத்த காடா துணியை வைத்து 11 நாட்கள் விடாமல் விளக்கேற்றுகிறார்கள். தினமும் சுத்தம் செய்யும் போது கொப்பரையில் உள்ள மையினை சேகரிக்கிறார்கள்.
காலம் காலமாக மீனவசமூகத்தினர் மட்டுமே இந்த மகாதீபத்தை ஏற்ற முடியும். பர்வத மகாராஜா குலத்தை சேர்ந்த மீனவர்கள் இந்த பணியை பக்தியுடன் செய்து வருகின்றனர்.