சிலிண்டர் வைத்திருக்கும் ஒவ்வொரு குடும்பமும் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய செய்திகள் | LPG Cylinder Safety Installation Tips, Regulations, Guide

Written by
LPG Cylinder

சிலிண்டர் பராமரிப்பு | LPG Cylinder Safety Installation Tips, Regulations, Guide

வீட்டை பராமரிக்கும் போது வீட்டில் இருக்கும் பொருள்களையும் உரிய முறையில் பராமரிக்க வேண்டும், அதை செய்ய தவறும் பட்சத்தில் சில நேரங்களில் மிகப்பெரிய விபரீதத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் ஆபத்து நிறைந்தது அத்தியாவசிய பொருளாய் வீட்டுக்குள் மாறிவிட்டது சிலிண்டர் பயன்பாடு. எனவே சிலிண்டர் பராமரிப்பு செய்வது மிக மிக அவசியம்.

அன்றாட பயன்பாட்டில் சிலிண்டர் இல்லாமல் சமையல் வேலை செய்ய முடியாது என்ற மன நிலைக்கு மாறிவிட்டார்கள் பெண்கள். அடுப்புக்கு மாற்றாக வந்த சிலிண்டருக்கு பிறகு இண்டக்‌ஷன் ஸ்டவ், எலக்ட்ரிக் ரைஸ் குக்கர், அவன் என பல கண்டுபிடிப்புகள் சமையல் செய்வதற்கு இருந்தாலும் சிலிண்டரை விட சிறந்தது வேறு ஏதும் இல்லை.

பயன்படுத்துவதற்கு எளிமையானதாக இருந்தாலும் இதில் நிறைய ஆபத்துகளும் நிறைந்திருக்கிறது என்பதையும் மறுக்க முடியாது. சில சமயத்தில் விபத்தை ஏற்படுத்திவிடவும் செய்கிறது.

கோடிக் கணக்கில் மக்கள் சிலிண்டரை பயன்படுத்தும் நிலையில், பல நேரங்களில் சிலிண்டர் வெடித்து விபத்து சம்பவங்கள் நடக்கும் போதெல்லாம் இது குறித்து பாதுகாப்பான முறைகளை கையாள விழிப்புணர்வை ஏற்படுத்துகிறார்கள். இருந்தாலும் சிலர் அறியாமல் சில தவறுகளை செய்துவிடுகிறார்கள்.

சிலிண்டரை உபயோகப் படுத்துபவர்கள் அதை பராமரிக்கும் விஷயத்தில் கவனம் செலுத்துவது இல்லை. சிலிண்டரை பயன்படுத்துபவர்கள் இது குறித்த போதிய விழிப்புணர்வையும் அதை பாதுகாப்பாக வைத்திருக்கும் வழி முறைகளையும் தெரிந்து வைத்துகொள்வது மிகவும் முக்கியம்.

சிலிண்டரை பராமரிக்கும் முறைகள்

குறிப்பு 1:

கேஸ் சிலிண்டரின் உள்ளே இருக்கும் புரோப்பேன் (Propane) மற்றும் பூட்டேன் (Butane) இவை இரண்டும் திரவ வடிவில்தான் இருக்கும். இது தான் அடுப்பு வழியாக நமக்கு வாயு வடிவில் வருகிறது. சிலிண்டரில் கேஸ் லீக் ஆகும் பொழுது எளிதில் உணர்ந்து கொள்ள உதவியாக எத்தில் மெர்கேப்டன் (Ethyl Mercaptan) என்ற வேதிப்பொருள் சேர்க்கப்பட்டிருக்கும்.

இந்த வேதிப்பொருள் தான் கேஸ் லீக்காவதை முதலில் எச்சரிக்கை செய்யும். அந்த வாசனையை உணர்ந்ததும் உடனடியாக உஷாராகி செயல்படவேண்டும். இல்லையென்றால் சிலிண்டரில் இருந்து வெளிவரும் திரவம் தரையில் பரவி சின்ன தீப்பொறி  ஏற்பட்டாலோ அல்லது எலெக்ட்ரிக்கல் ஸ்விட்சை ஆன் செய்தாலோ பெரிய விபத்து ஏற்பட்டுவிடும். இப்படித்தான் சிலிண்டர் விபத்து நடக்கிறது.

குறிப்பு 2:

பால் பாத்திரத்தை சிலர் அடுப்பில் வைத்துவிட்டு வேறு எதாவது வேலையைப் பார்க்கப் சென்று விடுவார்கள். அந்த நேரத்தில் பால் பொங்கிவழிந்து அடுப்பை அணைத்துவிடும். திரும்ப சமையலறைக்குள் வருபவர்கள், அடுப்புதான் அணைந்துவிட்டதே என்று நினைப்பார்கள். அல்லது அடுப்பை தாங்கள் அணைக்கவில்லை என்பதை மறந்து போய்விடுவார்கள். ஆனால் சிலிண்டரில் இருந்து கேஸ் வெளியேறி கொஞ்சம் கொஞ்சமாக பரவி வீடு முழுவதும் நிரம்பி விபத்துகளை உருவாக்கிவிடும். எனவே அடுப்பில் எதையாவது வைத்திருந்தால் பக்கத்தில் இருந்து கவனித்துக்கொள்ள வேண்டியது மிக அவசியம்.

குறிப்பு 3:

சில வீடுகளில் சமையலறையோடு பூஜை அறையும் சேர்ந்தே இருக்கும். பூஜை அறையில் ஊதுவத்தி கொளுத்துவது விளக்கேற்றுவது போன்றவற்றை செய்துவிட்டு அப்படியே வீட்டை பூட்டிவிட்டு வெளியே போய்விடுவார்கள். இந்த மாதிரியான நேரங்களிலும் சிலிண்டரில் இருந்து கேஸ் லீக் ஆகி விபத்து ஏற்படுகிறது.

குறிப்பு 4:

சிலர் சமையலறையில் ஃப்ரிட்ஜ், மைக்ரோவேவ் அவன் போன்ற மின்னணு சாதனங்களை வைத்திருப்பார்கள். சிலிண்டர் லீக் ஆகும் நேரத்தில் மின்சாரம் வரும் ஸ்விட்ச் போர்டில் இருந்து சிறிய ஸ்பார்க் வந்தாலும் உடனே தீ பற்றிக் கொள்ளும். எனவே சமையல் அறையில் மின் சாதனங்களைப் பயன்படுத்துவதை தவிர்ப்பது நல்லது.

குறிப்பு 5:

தற்பொழுது மாடுலர் கிச்சனில் சிலர் சிலிண்டரை மர கப்போர்டுகளால் பூட்டி வைத்து விடுவார்கள். இதனால் கேஸ் லீக் ஆனால் கூட தெரியாமல் போய்விடும். எந்த மாடல் சமையல் அறையாக இருந்தாலும் சரி சிலிண்டரை வெளியில் காற்றோட்டமான இடத்தில் வைத்திருக்க வேண்டும்.

குறிப்பு 6:

சிலர் ஜன்னலுக்கு அருகில் கேஸ் அடுப்பை வைத்திருப்பார்கள். அதிகமான காற்று அடிக்கும் நேரங்களில் அடுப்பு அணைந்து போய்விடும். வேறு வேலைகளில் இருந்தால் அது கவனத்துக்கு வராமல் போய்விடும். இந்த நேரங்களில் லீக் ஆகும் கேஸ் ஆபத்தைக் கொண்டு வந்து சேர்க்கும்.

குறிப்பு 7:

முன்பெல்லாம் அடுப்பைப் பற்ற வைக்க தீக்குச்சிகளைப் பயன்படுத்தி வந்தோம். தற்பொழுது லைட்டர் கருவி வந்தது எளிதாக இருப்பதாக பலரும் நினைக்கிறார்கள். ஆனால் அது உண்மை இல்லை. சொல்லப் போனால் லைட்டர்களாலும் விபத்துகள் நடக்கின்றன. கையில் வைத்து டக்டக் என்று தட்டிக் கொண்டிருக்கும் போது கேஸ் லீக் ஆகி கொண்டிருக்கும், கவனிக்காமல் விட்டு விட்டால் குப்பென நெருப்பு பற்றிக் கொள்ளும் ஆபத்தும் இருக்கிறது. எனவே இந்த விஷயத்தில் அலட்சியம் இருக்க கூடாது. கேஸ் அடுப்பை ஆன் செய்த உடனே நெருப்பை பற்ற வைப்பது ரொம்ப முக்கியம்.

கேஸ் லீக் ஆனால் என்ன செய்ய வேண்டும்..?

உடனடியாக அடுப்பையும் ரெகுலேட்டரையும் ஆஃப் செய்துவிட்டு ஜன்னல் கதவுகளை உடனடியாக திறந்து வைக்க வேண்டும். இதனால் வீட்டின் உள்ளே பரவி இருக்கும் கேஸ் வெளியே சென்றுவிடும். பிறகு ரெகுலேட்டரை சிலிண்டரில் இருந்து பிரித்து வைக்க வேண்டும். மேலும் சிலிண்டருடன் இணைந்திருக்கும் வெள்ளை நிற சேஃப்டி கேப்பால் சிலிண்டரை லாக் செய்து விடவேண்டும்.

கேஸ் லீக்கேஜ் ஆன உடன் சம்பந்தப்பட்ட ஏரியா சிலிண்டர் டிஸ்ட்ரிப்யூட்டருக்கு தகவல் தெரிவித்து விடுவது ரொம்ப நல்லது. ஒவ்வொரு 10000 வாடிக்கையாளருக்கும் ஒருவர் என்ற கணக்கில் இண்டேன்கேஸ் நிறுவனம் சார்பில் மெக்கானிக் இருக்கிறார்கள். அவர்கள் வாடிக்கையாளர்கள் இடத்திற்கே வந்து பிரச்னையை சரிசெய்து கொடுப்பார்கள். சிலிண்டரில் எதாவது பிரச்னை என்றால் அதை மாற்றியும் தந்து விடுவார்கள்.

இந்த சேவை காலை 9 முதல் மாலை 6 மணி வரை மட்டுமே செயல்படுகிறது. இது தவிர மாலை 6 முதல் காலை 9 மணி வரை உள்ள நேரங்களில் சிலிண்டர் கேஸ் லீக் ஆகிறது என்றால் Tool Free 1800 425 247 247 என்ற எண்ணை தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம். 24 மணி நேரமும் இயங்கும் இந்த சென்டரில் புகாரை பதிவு செய்த உடனே அந்தத் தகவல் உங்கள் ஏரியாவில் இருக்கும் டிஸ்ட்ரிபியூட்டர் மெக்கானிக், சேல்ஸ் ஆபிஸர், ஏரியா மேனேஜர் ஆகியோருக்கு போய்ச்சேர்ந்து விடும். அவர்கள் உடனடியாக வந்து சரிசெய்து கொடுப்பார்கள்.

சிலிண்டர் விபத்தைத் தடுக்க எந்த மாதிரியான பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்யவேண்டும்?

Suraksha LPG Hose Gas Pipe - ISI Certified
Suraksha LPG Hose Gas Pipe – ISI Certified
  1. கேஸ் சிலிண்டருக்கான புதிய இணைப்பைப் பெறும் போது உங்கள் பகுதியில் உள்ள டிஸ்ட்ரிப்யூட்டருக்கான அங்கீகரிக்கப்பட்ட மெக்கானிக்கை வரவழைத்து, அவர் மூலமாக சிலிண்டரை இணைப்பது முக்கியம்.
  2. ஒரு வேளை அவர்கள் வர மறுத்தால் சிலிண்டரை எப்படிஇணைப்பது என்ற Demo செய்து காட்டும்படி கேட்க வேண்டும்.
  3. முறையாக எப்படி சிலிண்டரை இணைப்பது என்று நன்கு கற்றுக் கொள்ள வேண்டும்.
  4. சிலிண்டர் டெலிவரி ஆகும் போது அதை அடுப்புடன் இணைத்து எரிய வைத்துப் சரிபார்க்க வேண்டும். பிரச்னை ஒன்றும் இல்லை என்பதை உறுதி செய்து கொள்ளவேண்டும்.
  5. சிலிண்டர் இணைப்புப் பெறும்போது எரிவாயு நிறுவனத்தில் கொடுக்கும் ரெகுலேட்டர், டியூப்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
  6. அதில் எதாவது பிரச்சனை ஏற்பட்டால் ஏரியா டிஸ்ட்ரிப்யூட்டருக்கு தகவல் கொடுத்து புதிதாக வாங்கிக்கொள்ள வேண்டும். இப்படி மாற்றிக்கொள்வதற்கு கட்டணம் ஏதுமில்லை.
  7. ஆனால் நீங்களாக சாதாரண கடைகளில் கிடைக்கும் தரம் அற்ற ரெகுலேட்டர், டியூப்களை வாங்கி எக்காரணம் கொண்டும் பயன்படுத்த வேண்டாம்.
  8. இது போன்ற தரமற்ற ரெகுலேட்டர் மற்றும் டியூப்களின் வழியாகத்தான் கேஸ் கசிவு ஏற்பட்டு அதிக விபத்துகள் நடக்கின்றன.
  9. இரண்டு அடுக்கு ஒயர்களால் ஆன தடிமனான Suraksha Gas டியூப்கள் எப்போதும் நிரந்தரமாக இருக்கும். 1 மீட்டர், 1.2 மீட்டர் என இரண்டு அளவுகளில் கிடைக்கிறது. 5 வருட வாரண்டியும் கிடைக்கிறது. எலி, பெருச்சாளி எது கடித்தாலும் டேமேஜ் ஆகாமல் உறுதியாக இருக்கும், ஆபத்துகளை தவிர்க்கும்.
  10. ஒரு சிலிண்டருக்கு அருகிலேயே இன்னொரு சிலிண்டரை வைப்பதை தவிர்க்கவும்.
  11. சிலிண்டரை நல்ல காற்றோட்டமான இடத்தில் நிற்க வைக்க வேண்டும். சிலிண்டரை செங்குத்தாக வைப்பதும் கூட விபத்துக்கு காரணமாகிவிடக்கூடும்.
  12. தினமும் தூங்கப் போவதற்கு முன்பு சிலிண்டரில் உள்ள ரெகுலரேட்டரை ஆஃப் செய்துவிட வேண்டும்.
  13. ஒரு சிலிண்டரின் ஆயுட்காலம் 10 வருடங்கள்.
  14. சிலிண்டர் துருப்பிடித்தது போன்று இருந்தால் அந்த சிலிண்டரின் மேற்பகுதியில் தயாரான தேதி, அதன் ஆயுள் முடிவுறும் தேதி போன்றவற்றை சரி பார்த்துக் கொள்ளவேண்டும்.
  15. 10 வருடங்கள் தாண்டி புழக்கத்தில் அந்த சிலிண்டர் இருப்பது தெரியவந்தால் தாராளமாக 1800 2333 555 என்ற எண்ணில் புகார் தெரிவிக்கலாம்.
  16. கேஸ் சிலிண்டர் தொடர்பான அனைத்து புகார்களுக்கும் 1800 2333 555 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.
  17. சிலிண்டர் டெலிவரி செய்ய வரும் போது அதன் எடையை பரிசோதித்துக் கொள்வது அவசியம். சிலிண்டரின் எடை 15 கிலோ உள்ளிருக்கும் கேஸ் எடை 14.2  கிலோ இரண்டும் சேர்ந்து 29.5 கிலோ இருக்க வேண்டும்.
  18. இந்த எடை விவரம் சிலிண்டரிலேயே குறிக்கப்பட்டிருக்கும். அதற்கு கூடுதலாகவோ குறைவாகவோ 100 கிராம் இருக்கலாம். குறைவாக இருந்தால் சிலிண்டரை திருப்பி அனுப்பி விட்டு வாடிக்கையாளர் மையத்தில் புகார் தெரிவிக்கலாம்.
  19. ISI முத்திரை பதிவாகி உள்ள தரமான அடுப்பை பயன்படுத்த வேண்டியது எல்லாவற்றையும் விட ரொம்ப முக்கியமானது. பர்னரை சுத்தம் செய்ய அடுப்பைக் கழற்றி தண்ணீரில் ஊற வைத்து சுத்தம் செய்ய வேண்டிய தேவையில்லை. அவ்வப்போது துணியால் சுத்தம் செய்தால் போதுமானது.
  20. 2 வருடங்களுக்கு ஒரு முறை ஏரியாவில் உள்ள கேஸ் சிலிண்டர் மெக்கானிக்கை அழைத்து அடுப்பு மற்றும் டியூப் கனெக்‌ஷன் ஆகியவற்றை பரிசோதனை செய்து கொள்வது அவசியம். இதற்கு கட்டணம் ரூ 70 மட்டும் செலுத்த வேண்டி இருக்கும்.
  21. அடுப்பின் அருகில் நின்று சமையல் செய்யும் போது தீ பரவாமல் இருக்க Fire Resitant Apron என்றொரு கவர் இருக்கிறது. இந்த கவர் தீப்பிடித்தாலும் எரியாத தன்மை கொண்டதால், இதை சமைக்கும் பொழுது பயன்படுத்தலாம். இது இண்டேன் கேஸ் டிஸ்ட்ரிபியூட்டர்களிடமும் கிடைக்கிறது.

சிலிண்டரின் ஆயுள் காலம் அறிய

சிலின்டரில் வாங்கும் போது அதில் A-25, B-24, D-26 என்ற எண் எழுதப்பட்டிருக்கும். இந்த எண்கள் கேஸ் சிலின்டரின் கால அவகாசங்களை குறிக்கிறது. அதாவது A-25 என்பது 2025 ஆண்டு, B-24 என்பது 2024 ஆண்டு, D-26 என்பது 2026 ஆண்டு இந்த கேஸ் சிலின்டரின் கால அவகாசங்கள் முடிவடைகிறது என அர்த்தமாகும்.

மேலும் கேஸ் சிலிண்டரில் குறிக்கப்பட்டிருக்கும் A, B, C, D என்ற 4 எழுத்துக்கள் மாதங்களை குறிக்கின்றன. A எழுத்து ஜனவரி, பிப்ரவரி, மார்ச் மாதங்களையும், B எழுத்து ஏப்ரல், மே, ஜூன் என்ற மாதங்களையும், C எழுத்து ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் என்ற மாதங்களையும், D எழுத்து அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களையும் குறிக்கின்றன.

உதாரணத்திற்கு,

A-25, B-24, C-25, D-26 போன்றவற்றை எடுத்துக் கொண்டால்..

A-25 –> கேஸ் சிலிண்டர் 2025 ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் இருந்து மார்ச் மாதத்திற்குள் காலாவதி ஆகிவிடும்

B-24 –> கேஸ் சிலிண்டர் 2024 ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இருந்து ஜூன் மாதத்திற்குள் காலாவதி ஆகிவிடும்.

C-25 –> கேஸ் சிலிண்டர் 2025 ம் ஆண்டு ஜூலை மாதத்தில் இருந்து செப்டம்பர் மாதத்திற்குள் காலாவதி ஆகிவிடும்.

D-26 –> கேஸ் சிலிண்டர் 2026 ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் இருந்து டிசம்பர் மாதத்திற்குள் காலாவதி ஆகிவிடும் என்று பொருள்.

எனவே நீங்கள் கேஸ் சிலின்டர் வாங்கும் பொழுது அவற்றில் குறிக்கப்பட்டிருக்கும் எண்களை பார்த்து வாங்க வேண்டியது மிகவும் அவசியமாகும்.

ஒரு எல்.பி.ஜி (LPG) சிலிண்டர் வாங்கி அது தீர்ந்து பிறகு மற்றொரு சிலிண்டர் நம் வீட்டு வாசலில் வந்து இறங்கும் அந்த நேரம் வரை..,

அதை பயன்படுத்தும் ஒவ்வொரு வாடிக்கையாளரின் பெயரிலும் ரூ40 லட்சம் காப்பீட்டுத் தொகையும் அதனுடன் வந்து சேர்கிறது என்ற தகவல் நம்மில் எத்தனை பேருக்கு தெரிந்திருக்கும் என்று தெரியவில்லை..!!

இது குறித்து போதிய விழிப்புணர்வு இல்லாததால் சிலிண்டர் விபத்து நேரும் போது பாதிக்கப்பட்ட குடும்பத்திலிருந்து யாரும் வந்து அந்த காப்பீட்டுத் தொகையை கேட்டு உரிமை கோருவதில்லை..!!

நாம் சிலிண்டருக்காக ஒவ்வொரு முறையும் கொடுக்கும் தொகையிலும் காப்பீடுக்கான பாலிசி தொகையும் சேர்த்து தான் செலுத்தி வருகிறோம்..!!

இந்த காப்பீடு குறித்து அரசாங்கமோ எண்ணெய் நிறுவனங்களோ கூட வாடிக்கையாளர்களுக்கு போதிய விழிப்புணர்வு ஏற்படுத்துவதும் இல்லை..!!

சிலிண்டர் விபத்து நேர்ந்து, அதன் காரணமாக உயிரிழப்புகள் ஏதும் நேர்ந்தால் சட்டப்படி அந்த குடும்பம் ரூ50 லட்சம் வரை சம்பந்தப்பட்ட நிறுவனத்தில் இருந்து காப்பீட்டுத் தொகை பெற முடியும்..!!

காப்பீடுகளுக்கு KYC கட்டாயம்

KYC என்பது தற்போது இன்றியமையாத ஒன்றாகி விட்டது. ஒரு வாடிக்கையாளரின் சுயுவிபரங்கள் அடங்கிய இந்த KYC முறையை வங்கிகள் உள்பட பல இடங்களில் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நவம்பர் -1 முதல் காப்பீட்டு கோரிக்கைகளுக்கு KYC கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (IRDAI) இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் 2022 -ம் ஆண்டு நவம்பர் 1 -ம் தேதி முதல் உடல்நலம் மற்றும் பொது காப்பீட்டிற்கு KYC சரிபார்ப்பு கட்டாயம் என கூறியுள்ளது.

LPG சிலிண்டருக்கு OTP கட்டாயம்

இதுவரை LPG சிலிண்டர்கள் டெலிவரி செய்யப்படும் பொழுது OTP தேவை இல்லை என்ற நிலையில் நவம்பர் 1 முதல் இந்த OTP முறை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இனி மேல் LPG சிலிண்டர்களை முன்பதிவு செய்யும் போது ​​நுகர்வோரின் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு OTP அனுப்பப்படும். அந்த OTP எண்ணை சிலிண்டர்கள் டெலிவரி செய்யும் போது கொடுத்தால் மட்டுமே சிலிண்டர் டெலிவரி செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

சிலிண்டர் விலை எவ்வாறு கணக்கீடு

சிலிண்டர் விலைகள் இறக்குமதி சம விலை ( IPP ) என்ற அடிப்படையில் கணக்கிடப் படுகின்றன. இந்தியா தனது பெரும்பாலான கச்சா எண்ணெயை இறக்குமதி செய்வதால் IPP என்ற ஃபார்முலாவைப் பயன்படுத்துகிறது. சிலிண்டரின் விலையை கணக்கிடும் போது அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு ஒரு முக்கிய காரணமாக உள்ளது.

மேலும் எண்ணெய் நிறுவனங்களின் செலவுகள், சரக்கு கையாளுவதற்கான செலவுகள், சந்தைப்படுத்தல் செலவுகள், டீலர் கமிஷன்கள் மற்றும் GST உள்ளிட்ட பிற உள்நாட்டு காரணங்களும் சிலிண்டர்களின் விலையை தீர்மானிக்கின்றன.

டெபாசிட் உயர்வு

புதிதாக சமையல் கேஸ் சிலிண்டர் இணைப்பு பெறுவதற்கு டெபாசிட் தொகை ரூ.1,450/- பெறப்பட்டது. இந்த நிலையில் தற்போது புதிதாக சமையல் கேஸ் சிலிண்டர் ஒன்று மட்டும் வாங்குபவர்கள் ரூ 2200/- டெபாசிட் கட்டணம் செலுத்த வேண்டும்.

2 கேஸ் சிலிண்டர் இணைப்பு பெறுபவர்களுக்கான டெபாசிட் கட்டணம் இதுவரை ரூ.2900/- ஆக இருந்த நிலையில், இனிமேல் டெபாசிட் தொகையை ரூ.4600/- என மத்திய அரசு உயர்த்தி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published.

Shares
%d bloggers like this: